"பெண்" மென்மையான குணமுடையவள், இரக்க குணம் படைத்தவள், கடல் போன்ற ஆழமான மனம் உடையவள் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் பெண்- பூமாதேவியாக, பொறுமைக்கு இலக்கணமாகச் சொல்லப்படுவது அவளுக்கே உரிய பெருமை. பெண்ணின் பொறுமை பூமாதேவியின் பெருமை போன்றதா? அல்லது ஒட்டு மொத்த பெண் சமுதாயத்திற்கே கிடைத்த பெருமையா?
பெண்ணிற்கு ஒரு குறிப்பிட்ட அளவீட்டுத்திட்டத்தையே இந்த சமூகம் காலகாலமாக பின்பற்றுகிறது. பெண் நிலத்தைப் பார்த்து நடக்கணும், மெதுவா சிரிக்கணும், ஆடவர்கள் கண் பார்த்து தெறிக்காதவண்ணம் உடையணியணும் , மொத்தத்தில் பூ மாதிரி இருக்கணும் என்று பலமாதிரியாக அளவிட்டுள்ள சமூகம் அவளது பொறுமைக்கும் இலக்கணம் வகுத்திருக்கிறது.
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது என்ற கொள்கையை பெண் பின்பற்றவே வேண்டும் என்று நினைக்கும் சமூகம் எம்முடையது. ஆண்பிள்ளை எதுவும் செய்யலாம், பெண்பிள்ளை பொறுத்தே போகணும். தாயிலிருந்து மாமியார் வரை சொல்லப்படும் உபதேசங்களை கேட்க நிச்சயம் பொறுமை அவசியமே. உபதேசங்களுக்கு செவி சாய்க்காவிட்டாலோ ,அல்லது வேறு விளக்கம் கொடுத்தாலோ கெட்ட பெயர் எமக்கே மிச்சம்.குறிப்பிட்ட ஒரு வயதிலிருந்தே இந்தப் பொறுமை அவளுக்குரிய சொத்தாக்கப்படுகிறது. அன்றிலிருந்து மண்ணிற்கு சொந்தமாக அவள் போகும் வரை பொறுமை!பொறுமை!!பொறுமை!!!
பெண் பொறுமைசாலியாக பூமாதேவியாக இருப்பது ரொம்பவுமே நல்லது தான். ஆனால் அது அவள் முன் அரங்கேறும் காட்சிகளைப் பொறுத்தது, அவளுடன் நடிக்கும் சக நடிகர்களைப் பொறுத்தது. பல காட்சிகளும், பாத்திரங்களும் அவளைச் சுற்றியிருந்து அவளை ஆட்டுவிக்க ஒட்டுமொத்தமாக அவளை மெல்லியலாளாக பார்ப்பது கொஞ்சம் நெருடுகிறது.
பூமாதேவி பொறுமைக்கு இலக்கணமானது சிறப்பு. அவள் முன் நடைபெறும் அத்தனை கொடூரங்களையும், அக்கிரமங்களையும் அவள் பொறுத்தே அமைதி காக்கிறாள். ஆனால் ஒருநாள் அவள் பொறுமை உடைகிறது. பூமாதேவி பூகம்பமாக மாறுகிறாள். இது அனைவருக்கும் தெரியும்.
பெண் பூமாதேவியாக இருப்பதும் பூகம்பமாக மாறுவதும் அடிக்கடி நடக்கிறது, நடக்கவும் இருக்கிறது வீடுகளிலும், நாடுகளிலும்.
2 comments:
எது எதற்கு பொறுமை காட்ட வேண்டுமோ அது அதற்க்கு பொறுமை காட்டி, எது எதற்கு எல்லாம் எதிர்த்து நிற்க வேண்டுமோ அது அதற்கு எல்லாம் எதிர்த்து நின்றால் தான் வாழ முடியும்..
//
பெண் பூமாதேவியாக இருப்பதும் பூகம்பமாக மாறுவதும் அடிக்கடி நடக்கிறது, நடக்கவும் இருக்கிறது வீடுகளிலும், நாடுகளிலும்.
//
உண்மைதான்
Post a Comment