Pages

Saturday, September 10, 2011

கண்ணுக்கு மறைந்தால் கருத்திலும் மறைந்திடுமா?

மனிதன் ஒரு வித்தியாசமான உயரினம். ஆண்டவன் உயிரைப் படைத்தானா? அல்லது மூலக்கூறுகளின் சேர்க்கையால் உயிர் வந்ததா? அல்லது வேறு ஏதேனும் வகையில் உயிர் வந்ததா என்று பல்வேறு ஆராய்ச்சிகள் அன்றிலிருந்து இன்றுவரை நடந்து கொண்டிருந்தாலும் ஒவ்வொரு வகையினரும் ஒவ்வொரு விதமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள். என் போன்றவர்களுக்கு உயிர் ஆண்டவன் படைப்பு.


ஒவ்வொரு மனிதனையும் பிரம்மன் எப்படிப் படைத்தானோ? கண், மூக்கு, வாய் எல்லாமே மாறுபட்டு நிற்கின்றது. குணமோ வேறுபட்டது. ஒத்த ரெட்டையாக இருந்தாலென்ன, ஒவ்வாத ரெட்டையாக இருந்தாலென்ன பிரம்மா ஐஸ்வர்யா ராயை படைத்தது போல இன்னொரு ஐஸ்வர்யா ராயை படைக்கவில்லை. அது ஜீன்ஸ் படத்திலும் பொருந்திப் போகிறது. 

குழந்தையாக இருந்ததை விட எங்களுக்கு புத்தி புலப்பட்டு நாம் விபரம் அறிந்த நாள் முதல் எத்தனை மனிதர்களுடன் பழகியிருக்கிறோம்? எத்தனை மனிதர்களிடம் உதவியை பெற்றிருக்கிறோம்? எவ்வளவு நெருக்கமாக பேசிச் சிரித்து இருக்கிறோம்? எத்தனை மனிதர்களின் அன்பைப் பெற்றிருக்கிறோம்?எத்தனை மனிதர்களிடம் அன்பும்,மரியாதையும் வைத்திருக்கிறோம்?எத்தனையெத்தனை  சம்பவங்கள், உறவுகள், நட்புகள், மனிதர்கள். 

ஆயிரக்கணக்கான மனிதர்களை கடந்து வந்திருக்கிறோம். அந்த முகங்களில் எத்தனை நம் நினைவில் உள்ளன? அல்லது அவர்களை மறக்காமல் நட்பு பாராட்டுகின்றோமா? ஒரு மனிதருடன் ஒரு சூழலில் பழகுகிறோம் அல்லது ஒரு தேவைக்காக பேசுகிறோம் அல்லது ஒரு கட்டாயத்தின் பேரில் கதைக்கிறோம். அப்புறம் அந்த சூழல் தேவை முடிவடைந்ததும் அல்லது முற்றுப்பெற்றதும் விடைபெறுகிறோம். பின்னர் அந்த மனிதர்களும், அவர்களின் நினைவுகளும் அத்துடனே நிறைவுபெறுகிறது.

அவசர சூழலா அல்லது இயந்திர வாழ்க்கையா மனிதனை கட்டிப்போட்டு ஆட்டிவைக்கிறது என்பது தெரியாது. ஆனாலும் நாம் பழகிய மனிதர்களை கடந்து கொண்டேயிருக்கிறோம். பழகும் மனிதர்களையும் என்றோ கடந்துவிடுகிறோம். இன்று நாம் மறந்து விட்ட மனிதர் நாளையும் நம்மை சந்திக்கலாம் அல்லது தேவைப்படலாம் என்பது நமக்கு ஞாபகத்தில் இருப்பதேயில்லை.

கண்ணுக்கு மறைந்தால் கருத்திலும் மறைந்திடும் என்பார்கள். பிரிந்த காதலர்கள் தங்கள் மனப் புண்ணை ஆற்றிக் கொள்ள சொல்லிக் கொள்ளும் ஆயுதம் அது. ஆனாலும் நிஜத்தில் பலருக்கும் பொருந்துவதாகவே இருக்கிறது. எத்தனையோ நபர்களையும், நிகழ்வுகளையும் இந்த ஒன்றில்தானே நாமும் மறக்கிறோம்.

0 comments:

Post a Comment